கடவுளும் கத்தியும்

கடவுளும் கத்தியும்

கடவுளும் கத்தியும்

பிப்ரவரி 23, 2024

கடவுளின் கையில் கத்தி, ஈட்டி, சூலாயுதம், அரிவாள் எதற்கு? தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் தேவைப் படும் கடவுளுக்கு பக்தர்களைக் காப்பாற்ற முடியுமா?

கடவுள் நம்பிக்கை

இயேசு, நம்பிக்கை, மதம்

மதமோ, நம்பிக்கையோ கடவுள் உருவாக்கியது அல்ல. மனிதர்கள் உருவாக்கியது என்பதற்கு ஆதாரமே இது போன்ற சாமிகளும், அதன் கையில் இருக்கும் ஆயுதமும் தான். எனினும், அது மனிதன் உருவாக்கியது என்பதற்காக பொய்யாகி விடாது. உண்மையில், எளிய மக்களின் நம்பிக்கையில் உருவானவரே கடவுள். ஆனால், அதற்கு எழுத்து வடிம் கொடுத்து எளிய மக்கள் புரிந்து கொள்ள முடியாத கொள்கை மற்றும் கோட்பாடுகளைக் கற்பித்து, பொய், புரட்டுக்களை இதற்குள் புகுத்தியது ஆன்மீக அறிவாளிகள் உலகம்.

கத்தியையும், அரிவாளையும் கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வைத்துக் கொள்ளவில்லை. மாறாக, கத்தியையும், அரிவாளையும் கொண்டு தன்னைக் காப்பாற்றிய ஒருவரை, கடவுளாக பார்த்ததே பாமரனின் கடவுள் பக்தி. தனக்கு நடக்கும் கொடுமையைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்று புழுங்கி வெதும்பிக் கொண்டிருந்த ஏழை, எளியவர்களைப் பாதுகாக்கும் காவலராக தோன்றிய ஒரு சாமான்ய மனிதனே இப்படி சாமியாக கையில் ஆயுதத்தோடு கடவுளாக மாறி இருக்கிறான். சக மனிதருக்காக தன்னை பலியிட துணிந்த ஒருவனின் தியாகமே அவனை மக்கள் நடுவில் சாமி ஆக்கி இருக்கிறது.

அடிமை சமூகத்தில் பிறந்த ஒருவன் ஆதிக்க வர்க்கத்தின் கொடுமை தாங்க இயலாது அரிவாள் கொண்டு தங்களை ஆட்டிப் படைத்த கொடூரர்களை வெட்டி வீழ்த்தியதை தத்ரூபமாக விளக்கும் காட்சியே அய்யனார் சாமியாக, எல்லை காக்கும் மாரி அம்மனாக கிராமங்களின் பாதுகாவலாக உயர்ந்து நிற்கிறது. தர்மத்திற்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு அடக்கி வைக்க முடியாத பொங்கி எழுந்த உணர்வுகளை சக்தியாக்கி ஆக்ரோசமான வதங்களால் அதர்மத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு தனி மனிதனின் கோபத்தை, கொலை வெறியை கடவுளே எழுந்து வந்ததாக மக்கள் நம்பினர். இதுவே கிராமங்களில் தெய்வங்கள் பிறந்த கதை. நிச்சயம் இந்த நம்பிக்கை பொய் அல்ல. மனிதனை மீறிய ஒரு விதமான சக்தி பிறந்த கதை இது.

இயேசு என்கிறவர் வரலாற்று மனிதரா, இல்லையா, வாதங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. எனினும், நற்செய்தி ஏடுகள் சொல்வதுபடி அவர் வாழ்ந்த வாழ்க்கை சாமான்ய மக்களுக்கானது. தன் இன மக்களை கடவுள் பெயரைச் சொல்லி பதவி, அதிகார வெறிக்காக கொத்தடிமைகளாக வைத்திருந்த யூத சமய தலைவர்களையும், யூதர்களை காலனிப் படுத்தி சுரண்டிக் கொண்டிருந்த உரோமை பேரரசையும் தனிநபராக எதிர்த்ததால், எங்கே தங்களின் அதிகாரத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்று பயந்து சமத்துவத்திற்கு எதிரான ஆதிக்க வெறியர்களால் சிலுவையில் அறையப் பட்ட ஒரு சாதாரண சாமான்ய மனிதரே இந்த இயேசு. அவர் எப்படி கடவுள் நிலைக்கு உயர்ந்தார்?

தங்கள் உரிமை வாழ்விற்காக தன்னந்தனியாக போராடிய அப்பாவி இளைஞர் அநியாயமாக சிலுவையில் அறைய பட்டு படுகொலை செய்யப் பட்ட கொடூரத்தை கண்முன்னால் பார்த்து, அவரது உறுதியைக் கண்டு வியந்து, அவருக்குப் பின்னால் இயல்பாக எழுந்த எழுச்சியைக் கண்டு அவரை கடவுளாகவும், சிலுவையை புனிதமாகவும் பார்க்க தொடங்கினர் யூத இனத்தின் ஏழை, எளிய மக்கள். அவருக்காக தங்கள் உயிரையும் கொடுக்க துணிந்து முன்வந்தனர். அவர்களின் உறுதியைக் கண்டு வியந்து அதையே பிற்காலத்தில் தங்கள் அரசியல் இலாபத்திற்காக கிறிஸ்தவம் என்கிற இந்த எழுச்சி இயக்கத்தை தங்கள் கைக்கு அடக்கமாக வைத்துக் கொள்ள அரசின் அதிகாரபூர்வ மதமாகவும், இதில் சோ்வோருக்கு சலுகைகளையும் அள்ளி அள்ளி தெளித்தது உரோமை பேரரசு. இதுவே கிறிஸ்தவம் ஒரு மதமாக வலுவாக உலகம் முழுக்க பயணமான கதை.

பல மதங்கள், இயக்கங்கள், பக்தி மார்க்கங்கள் உருவான கதையும் இது போன்றது தான். அய்யா வழி மார்க்கத்தின் அவதாரமான வைகுண்டருக்கும் இது பொருந்தும், இசுலாமியத்தை தோற்றுவித்த நபிகள் நாயகத்திற்கும் இது பொருந்தும். கருப்பசாமி, சுடலை மாடன், குல தெய்வங்கள் அனைத்தும் இதில் அடக்கம். ஆனால் இதில் கவனிக்க தக்க ஒன்று என்னவென்றால், இவர்கள் கருணாநிதி, செயலலிதா போன்று அதிகாரத்தில் இருந்து பணம் கொடுத்து தங்களுக்கான வரலாற்றை எழுதிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக, எளிய மக்களின் மனதில் நின்று இயல்பாக அவர்களால் வழிபட பட்டு பிற்காலத்தில் கடவுளாக உரு பெற்றவர்கள்.

இதில் எந்த கடவுள் பெரிய கடவுள் என்பதை நிர்ணயம் செய்தது கடவுளின் சக்தி அல்ல, மாறாக மனிதனின் அரசியல் அதிகாரம். ஒவ்வொரு மதம், ஒவ்வொரு கடவுள், ஒவ்வொரு மத கோட்பாடு உருவாகிய கதைக்குப் பின்னும் இது போன்ற பல அரசியல் கோரங்கள் மறைந்து இருக்கும். இதில் நாம் அறிய வேண்டியது ஒன்று தான்: கடவுளைப் படைத்தது மனிதர்களே. மதங்களை உருவாக்கியது மனிதர்களே. சாஸ்திர, சம்பிரதாயம் எழுதியது மனிதர்களே. கடவுள் எங்களைத் தோ்ந்தெடுத்தார் என்று புளுகியதும் மனிதர்களே. கடவுளே தங்கள் மதத்தை உருவாக்கினார் என்று பொய்யைப் பரப்பியதும் மனிதர்களே.

மத கோட்பாடுகளான மோட்சம், நரகம், அசுர உலகம், தேவர் உலகம், இறப்பிற்குப் பிறகு வாழ்வு, கடவுளின் அவதாரம் என அத்தனையும் மனித சிந்தனையிலே உருவானது தான். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதும் ஆன்மீக போதை அதிகமான ஒருவனின் உளறல் வார்த்தைகளே. கடவுளுக்கும் இதற்கும் துளியும் தொடர்பு இல்லை. ஏனென்றால், கடவுளுக்கு உடலும் கிடையாது, அவர் சொர்க்கத்தில் உறங்கிக் கொண்டு இருப்பவரும் கிடையாது.

கடவுள் என்று நாம் சொல்வது பூமி முழுவதும் பரந்து கிடக்கும் சக்தி மட்டுமே. அந்த சக்தி, தான் நினைத்ததை நினைப்பது போல நினைத்த நேரத்திற்கு நினைப்பவருக்கு முடித்துக் கொடுக்கும் மேஜிக் சக்தி அல்ல. அப்படி கடவுளை மேஜிக் பவர் நிறைந்தவர் என்று நம்புகிறவன், நம்ப சொல்கிறவன் கடவுள் நம்பிக்கை கொண்டவன் கிடையாது, மூட நம்பிக்கையும், மத வெறியும் மிகுந்தவன். பொய்யன். அவனே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவன்.

கடவுளை, மத நம்பிக்கையை கேலி செய்வது என்றால் இந்த உலகத்தின் அத்தனை மதங்களையும் கேலி செய்ய முடியும். மெக்காவில் இருந்து நபிகள் நாயகம் பறந்து சென்றார் என்று நம்புகிறது இஸ்லாம் மதம். மனிதன் பறக்க முடியுமா? கன்னி கருத்தாங்கி குழந்தையைப் பெற முடியும் என்று சொல்கிறது கிறிஸ்தவ மதம். ஆணின் துணை இல்லாமல் எந்த பெண்ணாவது கருத்தாங்க முடியுமா? மோசே கோலை நீட்டினால் கடல் இரண்டாக பிளந்தது என்று போதிக்கிறது யூத மதம். கடலை யாராவது இரண்டாக பிளக்க முடியுமா? பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்ததை விஷ்ணு பன்றியாக மாறி காப்பாற்றினார் என்கிறது இந்து மதம். பூமியை யாராவது சுருட்ட முடியுமா? கடலுக்குள் ஒளித்து வைக்க முடியுமா?

இந்து, இசுலாம், கிறிஸ்தவம், யூதம், பௌத்தம், சமணம் என அத்தனை மதங்களும் பெண்களை மிக மிக அருவருப்பாக, கேவலமாகவே தங்கள் புனித நூல்களில் எழுதி வைத்துள்ளது. இதில் எந்த மதமும் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது அல்ல.எனவே, தன் மதமே உண்மையானது, தன் நம்பிக்கையே பெரிது என்று துதிபாடும் எண்ணம் கொண்ட அத்தனை பேரும் மத வெறியர்களே.

மீண்டும் சொல்கிறோம்: நம் மதத்தைத் தீர்மானித்தது நம் தனிப்பட்ட நம்பிக்கை அல்ல, நாம் பிறந்த குடும்பமே. நாம் பிறந்த குடும்பமே நமக்கான மதத்தைத் தீர்மானித்தது. அது தற்செயலே. நாம் விரும்பி நுழைந்தது அல்ல. எனினும், அதனை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் இந்த தெளிவோடு மத நம்பிக்கையை அணுகுவது அவசியம். இந்தியாவில் பல மதங்கள் இருப்பதற்கு காரணம் கடவுள் நம்பிக்கையினால் அல்ல. . ஐரோப்பியர், முகம்மதியர் படை எடுத்து இந்தியாவில் நுழைந்ததாலே. இல்லை என்றால் நாம் அத்தனை பேரும் இந்து மதத்திலேயே இருந்திருப்போம். எந்த மதத்தையும் கடவுள் உருவாக்க வில்லை. அத்தனை மதங்களையும், மத கோட்பாடுகளையும் உருவாக்கியது மனிதனே. இந்த தெளிவு இருந்தாலே போதும், நமக்குள் மத வெறியோ, அடுத்த மதத்தைப் பற்றி தரக்குறைவாக பேசும் எண்ணமோ கண்டிப்பாக எழாது. மதங்கள் போதிப்பது பலவாயினும் எல்லா மதத்திலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே. அது: கடவுள் இருக்கிறார்.