வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

மார்ச் 04, 2024

ஓர் அரசால் அத்தனை பேருக்கும் நிரந்தர வேலையும், நிரந்தர ஊதியமும் கொடுக்க முடியுமா? தமிழகத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு சாத்தியமா?

நாட்டு நடப்புகள்

அரசு, நிர்வாகம், வாக்காளர்

ஓர் அரசு நினைத்தால் இங்கு இருக்கிற அத்தனை பேருக்கும் அவர்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்யும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவது நிச்சயம் சாத்தியமே. அனைவருக்கும் வேண்டாம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கட்டுமே. அது நிச்சயம் கடினமானது அல்ல. சரியான நிர்வாகத் திறமையும், எதிர் காலத்தைப் பற்றிய இலக்கும் இருக்கிற ஒருவர் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தால் அது ஒன்றும் எட்டாக் கனி அல்ல.

இதனை ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக சொல்ல வில்லை. இது நிச்சயம் சாத்தியம் என்பதற்காகவே எழுதுகிறோம். எப்படி? இன்றைக்கு இன்னமும் தமிழகத்தில் நிரப்பப் படாத காலி அரசுப் பணி இடங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. ஆசிரியர் பணி இடங்கள், தாலுகா அலுவலகங்கள், காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதார நிலையங்கள், போக்குவரத்து என்று இந்த காலி பணி இடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றை நிரப்பினாலே பல குடும்பத்தில் ஒருவருக்கு வேலை எளிதில் சாத்தியம். அத்தனை பேருக்கும் வேலை கொடுத்தால் அவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? நியாயமான கேள்வி.

செத்துப் போன தலைவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு 400 கோடிக்கு மேலாக செலவழித்து கல்லறை கட்ட வேண்டும் என்று ஆணை போடுகிற போது எப்படி பணம் வருகிறது? செத்தவர்களுக்கு செலவழிக்க பணம் இருக்கிறது, வாழ்கிற மக்களுக்கு இல்லையா? இது என்ன கேலிக்கூத்து? எம்எல்ஏக்களுக்கு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக சம்பளத்தை ஒற்றை நொடியில் உயர்த்த அரசுக்கு பணம் எப்படி கிடைக்கிறது? 12,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக ஐந்தே ஆண்டுகள் பதவியில் இருந்தாலும் எம்எல்ஏக்களுக்கு மட்டும் ஓய்வூதிய தொகையை உயர்த்த எப்படி பணம் கிடைக்கிறது?

அரசு விழாக்கள் என்கிற பெயரில் நடக்கும் ஆடம்பர வெட்டி வகையறாவுக்கு மட்டும் மாதம் பல கோடிகள் வீணாக கொட்டப் படுகிறது. இது தவிர, பத்திரிக்கை மற்றும் டி.வி சேனல்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரசு விளம்பர கட்டணமாக மட்டும் பல கோடிகள் கொடுக்கப் படுகிறது. இந்த செலவுகள் எதற்காக? இவற்றினால் ஏதாவது மக்களுக்கு பலன் இருக்கிறதா? பின் ஏன் இந்த செலவு? இவற்றைத் தவிர்த்தாலே அந்த கோடிகளில் சம்பளம் பலருக்கு கொடுக்க முடியுமே? காலி இடங்களை நிரப்ப முடியுமே?

அடுத்ததாக, பணம் இல்லாமலே இங்கு பலருக்கு வேலை வாய்ப்பை ஓர் அரசால் உருவாக்கித் தர முடியும். அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, ஒரு பேருந்து நிறுத்தத்தில் கட்டண கழிவறையில் கிடைக்கும் பணத்தை முறைப்படுத்தி வசூலித்தாலே அதில் அரசுக்கு வருமானமும் பெற்று பலருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியும். இது தவிர, பேருந்து நிலையத்தில் சைக்கிள், பைக், வாகனம் நிறுத்த பெறும் தொகை வேலை வாய்ப்பை உருவாக்க வழி வகுக்காதா? இதெல்லாம் இப்போது அநியாயமாக வசூல் செய்ய படுகிறது. போட்டிருப்பது ஒரு ரூபாய், வசூலிப்பதோ கூச்சமே இல்லாமல் 5 ரூபாய். இந்த பணம் எங்கே போகிறது? இந்த திராவிட அரசுகள் வீசி எறியும் எலும்புத் துண்டுகளாக காத்திருக்கும் கறை வேட்டிகளே இப்படி அநியாய வசூல் செய்து பெறும் பணத்தில் உண்டு கொழுத்து திரிகிறார்கள்.

இங்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் இருக்கிறது. ஊருக்கு ஊர் அமைந்து இருக்கும் ஓட்டல்களே எண்ணிக்கை சொல்லி மாளாது. அவற்றில் எத்தனை வேலை வாய்ப்புக்களை ஓர் அரசு நிர்வாகத் திறமையோடு திட்டமிட்டு உருவாக்க முடியும். அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்க வேண்டாம், ஆனால் அத்தனை வேலைகளையும் அரசால் நிர்வாகம் செய்ய முடியுமே, இந்த நடைமுறை வெளிநாடுகளில் சிறப்பாக நடந்து கொண்டு தானே இருக்கிறது. அரசு ஊழியருக்கு மட்டுமல்ல, எங்கு வேலை செய்தாலும் அத்தனை பேருக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை கொடுக்க முடியும், மெடிக்கல் லீவு, ஆண்டில் ஒரு மாத விடுமுறை எந்த வேலை செய்கிறவருக்கும் கொடுக்க முடியும், அத்தனை பேருக்கும் ஓய்வூதியம் பெற தகுதி ஆனவர்களே. இது எல்லாம் மேற்குல நாடுகளில் சாத்தியம் என்றால் இங்கும் சாத்தியப் படுத்த முடியும் தானே?

ஏழைகள் உழைப்பதற்கு என்றுமே சோம்பல் அடைவது கிடையாது. அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களே உழைத்து சம்பாதித்துக் கொள்வார்கள். அதற்கு கூட திட்டங்கள் தீட்ட முடியாதா? ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுத்து தானே மக்கள் நாம் பொருள் வாங்குகிறோம்? அது அரசுக்கு கிடைக்கிற இலாபம் தானே? பின் எப்படி சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போகிறது? அவர்கள் செய்கிற ஊதாரி செலவுகளுக்கு பணம் இருக்கிறது தானே!

ரேசன் கடைகளும், இலவசங்களும் பொது மக்களின் வாழ்வை உயர்த்த உதவும் தற்காலிக திட்டங்களே தவிர, நிரந்தர திட்டங்கள் அல்ல. ஆனால் வெட்கக்கேடு, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் இலவசம் மற்றும் ரேசன் கடைகள் இருக்கிறது. இவற்றில் பலன் பெறும் நபர்கள் தகுதியானவர்களா? அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பொங்கல் இனாம் ஆயிரம் ரூபாய் பெற தகுந்தவர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள். இது நிர்வாக சீர்கேடு அல்லவா? ரேசன் அரிசியை முதல்வர் குடும்பத்தில் ஒருவராவது ஒரு வேளையாவது சாப்பிடுவார்களா? குடலைப் பிடுங்குகிற நாற்றம். ஆனால் ஏழைகள் மட்டும் காலத்திற்கும் இதனைத் தின்று காலம் தள்ள வேண்டும்.

ரேசன் பொருளுக்காக மட்டும் தமிழக அரசு செய்கிற செலவு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். இவை எதற்கு? மக்களுக்கு வேலை கொடுத்தால் அவனுக்குத் தேவையானதை அவனே வாங்கிக் கொள்வானே. வேலை வாய்ப்பை உருவாக்குவதை விட்டு விட்டு வீணான செலவுகள் எதற்கு? காரணம் இல்லாமல் இல்லை. இது போன்ற திட்டங்களில் டெண்டர் விட்டால் தான் அதில் கொள்ளை அடித்து பணம் சம்பாதிக்க முடியும். அதற்காகவே இது போன்ற திட்டங்களை திராவிட அரசுகள் நிரந்தரமாக்க நினைக்கின்றன.

பலருக்கு வேலை கொடுக்க முடியாமல் இருப்பதற்கு அரசு சொல்லும் காரணத்தில் ஒன்று, அரசு நிறுவனங்கள் நட்டத்தில் ஓடுகிறது என்பது. தனியார் பேருந்து நடத்துகிற 90 விழுக்காடு உரிமையாளர்கள் இந்த அமைச்சர் மற்றும் கறை வேட்டிக் காரர்களே. இலாபம் கிடைக்கிற ரூட்டில் அவர்களது பேருந்து போக விட்டு விட்டு, நட்டம் வருகிற ரூட்டில் அரசு பேருந்தை விடுவது எப்படி அரசுக்கு இலாபம் ஈட்டித் தரும். இப்படித் தான் அரசாங்கம் விஞ்ஞான ஊழலால் நட்டத்தில் படுத்துக் கிடக்கிறது. ஒரு பக்கம் அரசு கேபிள், மறுபக்கம் இவர்களின் குடும்ப தொழிலான சன் டிவி கேபிள். இவர்கள் இலாபம் பார்க்க அரசு கேபிளை விட்டா வைப்பார்கள்? இந்த அறிவு கூட இல்லாத பொது மக்களை எப்படி திருத்த முடியும், யார் தான் திருத்த முடியும்?

இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது, அத்தனை வளங்கள் நிரம்பிக் கிடக்கிறது. இதனை வைத்து எத்தனை பேருக்கும் நிச்சயம் வேலை கொடுக்க முடியும், அத்தனை பேரின் அடிப்படைத் தேவையான மருத்துவம், வேலை, ஓய்வூதியம் நிச்சயம் வழங்க முடியும். அவை எல்லாம் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் எதற்காக கொடுக்க முடியவில்லை? காரணம், தமிழக வாக்காளர்கள். மக்கள் நலன் பற்றி அக்கறை கொள்கிற, திறமை இருக்கிற ஒருவரையாவது தமிழக வாக்காளர்கள் நம் காலத்தில் முதல்வராக தோ்ந்தெடுத்து இருக்கிறார்களா? இதுவரை இல்லை.

துண்டுச் சீட்டில் இருப்பதைக் கூட வாசிக்க தெரியாது உளறுகிறவர், தன் சொந்த மக்களை வெட்ட வெளியில் துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற கொலை காரன், தன் குடும்பம் உயர மட்டுமே சாகிற வரை தூங்காமல் உழைத்த ஊழல் விஞ்ஞானி, உச்ச நீதிமன்றமே உறுதி செய்த ஊழல் குற்றவாளி - இவர்களை ஆள்வதற்கு தோ்ந்தெடுத்தால் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்குவார்கள்? சுய தம்பட்டம் அடிப்பதற்கே இவர்களுக்கு நேரம் போதாதே? இவர்களுக்காக செலவழிக்கிற மக்களின் வரிப்பணத்தில் மட்டும் இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். அந்த அளவுக்கு வரிப் பணத்தை ஊதாரியாக செலவழித்த உத்தம வகையே இவர்கள் அத்தனை பேரும்.

கடவுள் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால், கடவுளால் எதையும் இங்கே மாற்ற முடியாது என்பது உண்மையிலும் உண்மை. அப்படி மாற்ற முடியும் என்று போதிக்கிறவன் நிச்சயம் கடவுளை வைத்து காசு பார்க்கும் வியாபாரியே. மக்களாட்சியில் மக்களே அத்தனைக்கும் பொறுப்பு. கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று எழுத சொன்னது கடவுளல்ல, ஆன்மீக போதை அதிகமான ஒரு மனித மூளையில் உதித்த ஒரு உளறல் வாக்கியமே. அதையே கடவுளின் வெளிப்பாடு என்று போதிக்கும் போதகர்கள் ஒன்று அறியாமையில் போதிக்கிறார்கள் அல்லது அறிவியல் வளர்ந்த நம் காலத்திலும் மூட நம்பிக்கை கதைகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்.

நம் காலத்தில் தோ்தல் அரசியலில் தோழர் நல்ல கண்ணு போன்ற எளிய தலைவர்கள், மக்களுக்காக சிந்திக்கிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எனவே, அரசியலில் யார் தான் நல்லவர்? என்று சொல்வது எல்லாம் சில அரசியல் அறிவு இல்லாத ஞான சூன்யங்களின் பிதற்றலே. ஆனால், நோ்மையாக இருந்தால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பதற்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாட்சி. அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆட்சியை அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தராது என்பதற்கு நாம் தமிழர் கட்சி ஓர் எடுத்துக் காட்டு. சுருங்கக் கூறின், தமிழக வாக்காளர் பலருக்கும் வாக்குச் சீட்டின் வலிமையும் தெரியாது, அரசியல் விழிப்புணர்வும் சுத்தமாக கிடையாது.

உண்மையில், பல தரப்பு வாக்காளர்களைக் கொண்டது தமிழக அரசியல் களம். சினிமா பைத்தியங்கள், காசுக்கு ஓட்டை விற்கும் வெட்கம் இல்லாதவர்கள், உதய சூரியன், இரட்டை இலை சின்னத்தில் எவர் நின்றாலும் சரி, கண்ணை மூடிக் கொண்டு சின்னங்களை மட்டுமே பார்த்து ஓட்டுப் போட பழகி விட்ட கொத்தடிமை கூட்டங்கள், பிரியாணி+குவாட்டர் குடிமகன்கள், மெத்த படித்தும் திராவிடத்திற்கு இன்னமும் சப்கை கட்டு கட்டும் அதி மேதாவிகள், திமுக புராணம் பாடும் கிறிஸ்தவ அடிவருடி ஆன்மீக வியாதிகள், நோட்டாவில் வாக்குகளை வீணாக்கும் ஏமாளிகள், ஓட்டு போடவே வாக்குச் சாவடிக்கு வராத ஞான சூன்யங்கள். இதுவே தமிழக அரசியல் களம். இவ்வளவையும் கடந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மலருமா? அப்படி நடந்தால் அதுவே கடவுள் இருப்பிற்கான நம் காலத்திய சாட்சி.