ஒழுக்கம்

ஒழுக்கம்

ஒழுக்கம்

மே 16, 2024

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

கடவுள் நம்பிக்கை

சமூகம், சிந்தனை, அறம்,

மதங்கள் தான் இந்த சமூகத்தில் ஒழுக்கத்தை, சமூக நீதியை, அறநெறிகளை, விசால பார்வையை வளர்த்தது என்பது பொய் மற்றும் மாயை. இதற்கு சிறந்த ஆதாரம், யூத மதம், கிறிஸ்தவ மதம், இசுலாமிய மதம் தோன்றுவதற்கு முன்னரே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர், ஆண் பெண் சமம், ஒருவனுக்கு ஒருத்தி’ என்று ஒழுக்கத்தின் உச்சத்தை, சமத்துவத்தைத் தூக்கிப் பிடித்த தமிழ் சமூகம். ஏனென்றால் தமிழ் சமூகம் இதனை மதத்திலிருந்து உருவாக்க வில்லை, மாறாக, தமிழர்களின் தொடர் சிந்தனையின் வளர்ச்சியில் உருவானதே இந்த உயர்வான சமத்துவ எண்ணம்.

வரலாற்றில் மட்டுமல்ல, நாம் வாழ்கிற இன்றைய காலத்தில் நாம் நம்புகிற ஒழுக்கமும் அது சார்ந்த அற நெறிகளை உருவாக்கியதும் மதங்களோ, மத நூல்களோ அல்ல. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக மானுட சமூகம் பகுத்தறிவு கொண்டு வளர்த்து எடுத்தது. வாதம், விவாதம், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெரியார் போன்ற சில முன்னோடிகள் தந்த துணிவான சிந்தனைகள், அரசியல் சட்டங்கள் மூலமே இதனை இன்று நாம் அடைந்து உள்ளோம். எந்த வகையிலும் மதத்திலிருந்து வரவில்லை.

ஆனால் ஒழுக்கம், அறம் சார்ந்து பல மத நூல்கள் போதித்தது இது தான்: விபச்சாரத்தில் ஒரு பெண் பிடிபட்டால் அவள் கல்லால் எறிபட்டு சாக வேண்டும், விதவை தீக்குளிக்க வேண்டும், மதத்தை விட்டு ஒருவர் விலகினால் மரண தண்டனை, புனித நாளை கடைப் பிடிக்கா விட்டால் பாவம், கலப்பு திருமணம் தீண்டாமை குற்றம், அடிமைகள் தேவை, பெண்கள் என்றால் தீட்டு, போர் என்றால் ஊருக்குள் புகுந்து ஆண்களை, பெண்களை, குழந்தைகளை வெட்டி கொலை செய்ய, கொள்ளை அடிக்க அங்கீகாரம்....etc. பின் எப்படி உலகில் ஒழுக்கத்தையும், அறத்தையும் கற்றுக் கொடுத்தது மதங்கள் என்று ஒருவர் வாதாட முடியும்?

பல நல்ல காரியங்கள் நடக்க மதங்கள் தானே காரணம்? என்று வாதிக்கலாம். கடவுள் நம்பிக்கை இருப்பதால் தான் அடுத்தவருக்கு உதவி செய்கிறேன் என்று சொல்வதும், நான் இதைச் செய்தால் இன்ன பலன் எதிர்காலத்தில் எனக்கோ, என் சந்ததிக்கோ கிடைக்கும் என்று நினைத்துச் செய்ய தூண்டும் மத போதனையும் மனித இனத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் சிந்தனை. இன்னமும் நம் சிந்தனை பக்குவம் பெறாத, முதிர்ச்சி அடையாத தன்மையின் வெளிப்பாடே இது மாதிரியான எண்ணங்கள். உண்மையில், உதவும் எண்ணத்தைத் தூண்டியதும் மதங்கள் அல்ல, மனிதமே.

கடவுள் மனிதனைப் படைக்க வில்லை, மனிதனே கடவுளை தன் சாயலிலும், உருவத்திலும் படைத்தான். தான் படைத்த கடவுளுக்கு தன் மொழியில் யாவே, எல், சிவன், விஷ்ணு, அல்லா, சக்தி, காளி என்று பெயரிட்டான். அவர்களை வைத்து உலகம் உருவானது இப்படி என்று கதை எழுதினான். அவர்கள் வழியாக சமூகத்திற்கு அவன் அன்றைக்கு நம்பியதை ஒழுக்கமாக கற்பித்தான். அதையே கடவுள் சொன்னதாக மக்களை நம்ப வைக்க பொய் சொன்னான். இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மனிதன் தான் படைப்பில் உயர்வு என்பதே மிகப்பெரிய பொய்.

சிந்திப்போம். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் பேசுகிற நம் காலத்திற்கு எண்ண முடியாத அளவுக்கு சாலமோனுக்கு மனைவியர் இருந்தனர், தசரதருக்கு ஆயிரம் மனைவியர், இசுலாமிய ஆண் ஒருவர் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசுகிற சங்கடமான வரிகள் நம் வாழ்விற்கு எதற்கு? ஒருவனை கொலை செய்யக் கூடாது என்று தெரிய 4000 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட பைபிள், குர்ஆன், பகவத் கீதை படித்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா? எது ஒழுக்கம், எது சரி என்று தெரிய மத புத்தகங்கள் இல்லாமல் நம் குழந்தைகளுக்கு நமக்குக் கற்றுக் கொடுக்கத் தெரியாதா?

பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமூக சிந்தனை வளர்ந்து விட்ட பிறகும் மக்களைச் சாதியால் பிளவு படுத்திக் காட்டும் மனு தர்மத்திற்கு, சனாதன தர்மத்திற்கு, பெண் அடக்கு முறையை நியாயப்படுத்தும் பழைய ஏற்பாட்டு பைபிளுக்கு, குர் ஆனுக்கு நம் காலத்தில் ஏன் இன்னமும் முட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே கேள்வி. வேண்டு மென்றால் நல்லவைகளை மட்டும் பொறுக்கி எடுத்து புதிய புத்தகத்தை நம் காலத்திற்கு ஏற்ற வரிகளை உருவாக்கி போதிக்கலாமே ? காலத்திற்கு ஏற்ற புதிய வரிகளைச் சோ்க்கலாமே? 4000 ஆண்டு காலத்திற்கு முன்பு கட்டளைகளைக் கொடுத்த கடவுள் இப்போது கொடுக்க வேண்டியது தானே? நமக்குள் எது சரியான போதனை, எது தவறான போதனை என்கிற குழப்பம் எளிதில் தீர்ந்து போகுமே? அன்றைக்கு பல கட்டளைகளைக் கொடுக்க மனிதர் முன் வந்த கடவுளுக்கு இன்றைக்கு வருவதற்கு எது தடையாக இருக்கிறது? அறிவியலா? அறிவு வளர்ச்சியா?

நிரந்தரமான ஒழுக்கம், அறம் என்று உலகில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. மாற்றம் ஒன்றே மாறாதது. அப்படி இருக்க எப்போதோ எழுதப்பட்ட மத சாஸ்திரங்களை அறிவும், அறிவியலும் வளர்ந்து விட்ட நம் காலத்தில் நாம் ஏன் இன்னமும் உடும்புப் பிடியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? கொலை செய்யக் கூடாது என்று கடவுள் பெயரைச் சொல்லிப் போதிக்கும் கிறிஸ்தவ பாஸ்டர் ஒருவர் தன்னையோ, தன் குடும்பத்தையோ கொலை செய்ய வரும் ஒரு கொலையாளியை கொன்றால் தான் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றால் கொலை செய்ய மாட்டாரா?

அவரே அவருடைய போதனைக்கு முரணாக நடக்கிற போது, தான் போதித்ததை கடைப்பிடிக்க முடியாத போது, ஏன் இவற்றை Absolute கட்டளையாக கற்பிக்க வேண்டும்? எல்லாவற்றையும் Relative எனப்படும் சூழ்நிலை தானே தீர்மானிக்கிறது? ஓரினச் சோ்க்கையை சாவான பாவமாக போதித்த மத புத்தகங்கள் நடுவில் இன்றைய சமூகம் அதற்கு அங்கீகாரம் கொடுத்த பிறகு மதங்களின் பார்வையும் மாறி விட்டதே? இன்றைக்கு அவர்களும் கடவுளின் பிள்ளைகள், அவர்களையும் வரவேற்று மத குருமார்கள் ஆசீர் வழங்க வேண்டும் என்பது வரை வந்து விட்டதே? பின் எப்படி பொத்தாம் பொதுவாக கொலை செய்வது குற்றம், திருடுவது குற்றம், பொய் சாட்சி சொல்வது குற்றம் என்று மத நூல் அடிப்படையில் ஒருவருக்கு பாவ முத்திரையும், தண்டனையும் தீர்ப்பும் குற்ற உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்? மோட்சம், நரகம் என்று காட்டி பயமுறுத்த வேண்டும்? நாடு, மொழி, கலாச்சாரம், பண்பாடு என வேறுபட்டிருக்கிற மனித குலத்திற்கு ஒரே கட்டளையை பொது கோட்பாடாக முன்மொழிவது முட்டாள்தன முடிவு இல்லையா?

அறிவியல் நமக்கு பலவற்றைத் தெளிவு படுத்தி இருக்கிறது. இயற்கை விதிகள் எப்படி இயங்குகிறது என்கிற பல முடிச்சுகளை அவிழ்த்து இருக்கிறது. இந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்ட பிறகும் இயேசு கடல் மீது நடந்தார், மோசே ஒரு கோலைக் கொண்டு கடலை இரண்டாகப் பிளந்தார், நபிகள் நாயகம் வானம் நோக்கி பறந்தார், விஷ்ணு பெருமான் பூமியை வெறும் கால்களைக் கொண்டு அளந்தார் போன்றவை வரலாற்று நிகழ்வுகள் என்று போதிப்பது மக்களை மீண்டும் 4000 வருட மூட நம்பிக்கை உலகத்திற்கு இழுப்பதற்கு சமம் அல்லவா? இதனை இன்னமும் அப்படியே நம்புகிற படித்தவர்களை என்ன சொல்வது?

மூட நம்பிக்கை வேறு, கடவுள் நம்பிக்கை வேறு. மூட நம்பிக்கையை எதிர்த்தாலே அது கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பது ஆகாது. மூட நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றாக பயணம் செய்யவும் முடியாது. அது மனிதனை மூர்க்கனாக மாற்றி விடும். எனவே, இது போன்ற மூட நம்பிக்கைக் கதைகளைப் பரப்பி, மனிதர்களின் சிந்தனைகளை மழுங்கடித்து கடவுள் நம்பிக்கையை பரப்புவதை ஏற்க முடியாது. ஆதாரம் இல்லாத எந்தவொரு மத நம்பிக்கை அல்லது மத கோட்பாடுகளோடும் நாம் எந்த பகுத்தறிவு வாதத்தையும் செய்ய முடியாது, ஏனெனில் அவை அடிப்படையில் பகுத்தறிவற்ற, நியாயம் இல்லாத மற்றும் மனித அறிவினுடைய கற்பனையான படைப்பு.

நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருப்பது நம் நம்பிக்கையினால் அல்ல, நாம் பிறந்த நாடு, நாம் பிறந்த குடும்பத்தினால் பெற்றதே. இன்றைக்கு இசுலாமிய குடும்பத்தில் பிறந்து இசுலாமியத்திற்கு ஆதரவாக பொங்கி எழும் ஒருவர், ஒருவேளை இந்து குடும்பத்தில் பிறந்திருந்தால் அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல தானே பேசிக் கொண்டு இருப்பார்? எனவே, நாம் செய்யும் வாதமும் நம் பிறப்பால், வளர்ப்பு முறையால், மூளைச் சலவையால், அடுத்தவர் திணிப்பால் நாம் பெற்றது மட்டுமே. இந்த அடிமை முறை மாற வேண்டும். மதத்தைத் தோ்வு செய்யும் சுதந்திரம் ஒரு குழந்தைக்கு 18 வயதில் வழங்கப்பட வேண்டும். அது சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். சமூக நிர்பந்தத்தால், சூழ்நிலையால், குடும்ப நெருக்கடியால் எடுக்கப்படும் முடிவாக இருக்கக் கூடாது.

ஆனால், நாம் இந்த சிக்கலில் மாற்றிக் கொண்டது போதாது என்று நம் குழந்தைகளையும் சமூக நெருக்கடியால், குடும்ப நிர்பந்தத்தால் மதம் என்கிற சிலந்தி வலையில் சிக்க வைத்து விடுகிறோம். எதுவும் அறியாத பிஞ்சு பருவத்தில் நம் குழந்தையை நாம் சார்ந்த மதத்திற்கு அடிமையாக விற்று அதன் மூளையில் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத மத கோட்பாடுகளை நம்பும்படி திணிக்கிறோம். இது ஒரு குழந்தையின் சுதந்திரத்தை பறித்து நம் கருத்தை திணிப்பது அல்லவா? உண்மை, பல வேளைகளில் அது நிர்பந்தம், நெருக்கடி, தவிர்க்க முடியாத சூழல். அப்படிப் பட்ட சூழ்நிலையில் குறைந்த பட்சம் அந்த குழந்தைக்கு சமூக இணக்கத்தை, அடுத்தவர் மதத்தை மதிக்கும் நல்ல பண்பையாவது கற்றுக் கொடுக்கலாமே?

ஆனால் இந்த நிலை மாறும் என்கிற ஒரு துளி அளவு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. காரணம், இந்த உலகத்தில் தோன்றி பல கோடி மக்களால் பின்பற்றப் பட்ட அரசர்களின் ஆதிக்கத்தால் நிலை கொண்ட பாபிலோனிய, எகிப்திய, மெசபடோமிய, கிரேக்க, உரோமை மதங்கள் & மதக் கடவுள்கள் காலப் போக்கில் காணாமல் போயிருக்கிறது. மக்களால் புறந்தள்ளப் பட்டு இருக்கிறது. அது போல கண்டிப்பாக நம் கால மதங்கள் பிற்காலத்தில் காணாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. நிச்சயம் அவைகள் காணாமற் போக வேண்டும். ஏனென்றால், அதுவே பிற்கால மனித சமூகம் சாதி, மத, இன, வேற்றுமை பிளவுகள் கடந்து சமத்துவம, சமாதான சமூகமாக வாழ்வதற்கான ஒரே வழியாக இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. நம் மத வெறிச் சிந்தனைகளும் மாறட்டும்.