பலியாகும் செம்மறிகள்

பலியாகும் செம்மறிகள்

பலியாகும் செம்மறிகள்

ஜனவரி 30, 2022

மக்களை மத நிறுவனத்தின் பெயரால் வழிநடத்தும் ஆன்மீக தலைவர்களில் ஒருவருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று இன்னமும் நம்புகிற விசுவாசியா நீங்கள்? எங்களோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.

ஆன்மீக அரசியல்

தஞ்சாவூர் விடுதி, மத மாற்றம், சிஸ்டர், மத வெறி, ஆயர் பேரவை

பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்று சொல்வார்கள். அது தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. தஞ்சாவூர் பள்ளி விடுதியில் நடந்த தற்கொலை அரசியலாக மாற காரணம் நிச்சயம் மதவெறி தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது பிஜேபியின் மதவெறி அல்ல, தமிழக ஆயர் பேரவையின் மதவெறி. இவர்கள் செய்த பாவத்திற்கான கூலி அப்பாவி ஒருவரின் தலையில் இடியாக விழுந்திருக்கிறது. அதற்கான அச்சு அசல் ஆதாரம் தான் அவர்கள் கடந்த சட்டமன்ற தோ்தல் நேரத்தில் வெளியிட்ட இந்த அறிக்கை.

ஒவ்வொரு வரியிலும் பிஜேபி கட்சிக்கு எதிராக எவ்வளவு வன்மத்தை இவர்கள் கக்கி இருக்கிறார்கள்? மத நம்பிக்கையை மூலதனமாக வைத்து தங்களை மலை போல நம்பும் விசுவாச கூட்டத்தை கொத்தடிமை வாக்கு வங்கியாக்க எவ்வளவு நஞ்சை விதைத்து இருக்கிறார்கள்? அந்த கட்சியின் மீது எப்படி எல்லாம் மதச்சாயத்தை பூசி வாக்குகளை அறுவடை செய்து திருடர்களை ஆட்சியில் அமர்த்த மெனக்கெட்டு உழைத்து இருக்கிறார்கள்?

பிஜேபிக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கோயில் கோயிலாக வாசிக்க தமிழக ஆயர் பேரவை கொடுத்த இந்த மதவெறி அறிக்கைக்கு அப்பாவியாக தண்டனை அனுபவிப்பவர் தான் இந்த அருட்சகோதரி. விட்ட கணக்கு இப்போது தொட்ட கணக்காக கேள்வி கேட்கிறது. பதில் சொல்ல வேண்டிய ஆயர் பேரவையோ பக்குவமாக பதுங்கி விட்டது. தோ்தல் அரசியலில் எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்?

நியாயம் பேச வேண்டாம். நடுநிலையாக பார்ப்போமே? ஆன்மீகத்தின் வேலை என்ன? அரசியல் செய்வதா? மதம் மட்டுந்தான் ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுக்க பார்க்கிற அளவுகோலா? ஆதரவு நீட்டினால் ஐந்து வருடமும் பதில் சொல்கிற பொறுப்பும் உண்டே? அதை மட்டும் எப்படி எளிதாக துறந்து ஊமையாக மாற முடியும்? புனிதர் பட்டத்துக்கு அழைப்பு கொடுக்க ஓடோடி வந்த சார்சு மன்னர் கூட இந்த விஷயத்தில் தலை காட்டவே இல்லயே? பிழைக்க தெரிந்த தூதுவர்.

கூடன்குளத்தில் அணு உலைக்கு எதிராக அற வழியில் போராடிய கிறிஸ்தவ மக்கள் மீது தேசத்துக்கு எதிராக சதி செய்த வழக்கு போட்டு சித்ரவதை செய்தது யார்? தூத்துக்குடி மறைமாவட்ட வங்கிக் கணக்கை முடக்கியது யார்?

நீட், அணு உலை, ஜிஎஸ்டி, கெயில் எரிவாயு, ஸ்டொ்லைட், சேது சமுத்திர திட்டம், உடன்குடி அனல் மின் நிலையம், சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு என்று அத்தனை நாசகார திட்டங்களுக்கும் சுழி போட்டது யார்?

இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது உண்ணா விரதம் நாடகம் நடத்தி கூட்டணியில் இருந்தும் நடப்பதை வேடிக்கை பார்த்தது யார்? இந்த புனித ஆயர் கூட்டம் ஆதரவுக்கரம் நீட்டிய காங்கிரஸ்-திமுக கூட்டணி தானே? பிஜேபி அல்லவே? இங்கும் பழி ஓரிடம் பாவம் ஓரிடமா? இது என்ன ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறு கண்ணில் வெண்ணெய் வைத்து ஆதரவு கொடுக்கிற கேவலமான அரசியல்?

நியாயப் படுத்த வேண்டாம். அறத்தின் பால் நின்று விமர்சனம் செய்து பார்ப்போமே? பிஜேபி கிறிஸ்தவர்களை மதம் மாற சொன்ன வரலாறு இல்லயே? மதமாற்றம் செய்தால் தடுப்போம் என்று தானே சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் மதமாற்றம் நடக்க வில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? பல கிறிஸ்தவ பிரிவினை வாதி சபைகள் தெரு தெருவா கூவி கத்தோலிக்க மக்களையே மதம் மாற்றம் செய்ய வில்லையா? இந்த மத மாற்றத்தை எதிர்த்தாவது ஆயர் பேரவைக்கு அறிக்கை எழுத திராணி உண்டா?

மொத்தத்தில் இவர்கள் திமுக – காங்கிரஸ் என்னும் திருடர் கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். சரி, ஆதரவு கொடுத்து ஏதாவது பலன் உண்டா? பத்து வருசம் ஆட்சியில் இருந்த இந்த காங்கிரஸ்-கூட்டணி தலித் கிறிஸ்தவ சலுகையை உறுதிப்படுத்த முடிந்ததா? பின் அப்படி என்ன ஒட்டி உறவாட வேண்டிய தேவை?

பாலியல் சமத்துவம் என்று இந்த தோ்தல் அறிக்கையில் வீராப்பாக புரூடா விட்டு புளுகி இருக்கிறார்கள். பாலியல் சமத்துவம் பற்றி பேசுகிற யோக்கியதை இவர்களில் எவருக்காவது இருக்கிறதா? பேசினால் இந்த கூட்டத்தில் அவர்கள் இருக்க முடியுமா? பிழைக்க தெரிந்த கூட்டம் ஆயிற்றே இவர்கள்.

இவர்களின் திருச்சபையில் பாலியல் சமத்துவம் இருக்கிறதா? பொய் சொல்கிற குற்ற உணர்ச்சி இல்லாத வெறும் ஜடங்களா இவர்கள்? இந்த அறிக்கையில் இருக்கிற இந்த ஒற்றை வார்த்தை போதும், இவர்கள் அத்தனை பேரும் எவ்வளவு கடைந்தெடுத்த 420 என்பதை காட்டி கொடுக்க.

இந்த பிரச்சனை வெடித்த போது அத்தனை பேரும் இணைந்து அறிக்கை விடுகிற பொறுப்பு இருக்கிறது தானே? ஒருவர் வாயை திறந்தாரா? திறந்த ஒருவரும் கழுவுற மீனில் நழுவுகிற உப்பு சப்பு இல்லாத அறிக்கையை ஒப்புக்காக விட்டவரே. அறிக்கையும் கேள்விகளும்

இது போன்ற அநியாய நிலைப்பாடு எடுப்பதால் இந்த தலைகளுக்கு எந்த பிரச்சனையும் வராது. வந்தாலும் அவர்களுடைய Diplomacy Relation வழியாக மேல் உள்ள அதிகாரத்தோடு தொடர்பு கொண்டு சுமூகமாக பேசி முடித்து விடுவார்கள். இவர்களை நம்பி வாக்கு போடுற விசுவாசி தான் ஏமாளி.

கிறிஸ்தவர்களே முகம் சுளிக்கிற அளவுக்கு கேவலமாக இந்து மக்களின் மத நம்பிக்கையான பூமா தேவியை பற்றி பேசிய புனிதர்கள் ஞானியின் வழிகாட்டலில் தப்பி விடுவார்கள். ஆனால் ஆணாதிக்க மேதாவி வர்க்கம் செய்கிற அரசியல் தெரியாது அவர்களை நம்பி வாக்களித்த சேவை மனப்பான்மை கொண்டிருக்கிற அன்னையர் தான் கத்தாத செம்மறியாய் வெட்டுவதற்கு நோ்ந்து விடப்படும் பலியாடுகள்.

உண்மையில் புனிதமான சேவை செய்வது அதிகார செருக்கு பிடித்து திரியும் இந்த ஆணாதிக்க பூசாரிகள் அல்ல. மாறாக மருத்துவ பணி, கல்விப்பணி, முதியோர் பணி, தொழுநோய், எய்ட்ஸ் நோயாளி மறுவாழ்வு என்று அத்தனை கடினமான பணிகளையும் செய்வது இந்த புனிதமான தாய்மை உணர்வுள்ள மரியாக்கள் தான்.

தவறே செய்யாது ஆயர்களின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியான இந்த அருள் அன்னையின் உணர்வில் இந்த வினாடி ஓடிக் கொண்டு இருக்கும் மன அழுத்தம், வலி, வேதனை, சோர்வு, அவமானத்தை கடவுள் என்கிற தாயால் உணர முடிந்தாலும் காப்பாற்ற முடியாது. சோ்ந்து அழத்தான் முடியும். கடவுள் அல்ல, அதிகாரமே தமிழகத்தில் அத்தனையையும் தீர்மானிக்கிறது. அது தவறான கைகளில் கிடந்து அழுது ஓலமிடுகிறது. அதனை மீட்டெடுக்கும் ஒரே தருணம் தோ்தல் களம் மட்டுமே. அதுவரை இந்த துன்ப கிண்ணத்தை தாங்கியே ஆக வேண்டும்.

இது கடவுளின் திட்டம், கடவுளுக்காக இதை தாங்க வேண்டும், துன்பம் என்பது மறைபொருள் – என்று இதற்கும் கடவுள் மீது பழி போட்டு புனித சாயத்தை பலியாடுகள் மீது அழகாக பூசி மெழுகுவதில் கைதோ்ந்த இந்த பிரசங்க பீரங்கிகள் ஆபத்து நேரத்தில் விட்டு ஓடி விடுவது திருச்சபையின் வரலாற்றில் அடிக்கடி நிகழ்கிற வாடிக்கையான ஒன்று தான் என்பதற்கு வன செல்விகளும், கொரோனாவும் நம் காலத்து சான்றுகள்.

இந்த அப்பாவி அருட்சகோதரியின் அநியாய சிறைக்கு, ஆயர்களை நம்பி அவர்கள் கை நீட்டிய திருடர்களின் கூடாரத்திற்கு கொத்தடிமையாக வாக்கை விற்ற அத்தனை விசுவாசிகளும் காரணம். எத்தனை புண்ணிய ஸ்தலம் போனாலும், பாவ பொறுத்தல் செய்தாலும் இந்த பாவத்திற்கு விமோசனமே கிடைக்காது. கடவுளுக்கு ஒருநாள் வாக்கை வழங்கிய அத்தனை புனித விசுவாசிகளும் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் தோ்தல் கால அறிக்கை:

மதுரை பேராயரின் அறிக்கை
மதுரை பேராயரின் அறிக்கை