இயேசு வரலாற்று மனிதரா?

இயேசு வரலாற்று மனிதரா?

இயேசு வரலாற்று மனிதரா?

ஜூலை 21, 2022

இயேசு வரலாற்று மனிதரா? கணவனை அறியாத ஒரு கன்னிப் பெண்ணின் வயிற்றில் கடவுளின் மந்திர சக்தியால் உருவானவரா? இயற்கை விதிகளுக்கு எதிரான பல மேஜிக்குகள் செய்ய முடிந்தவரா? மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக கடவுளால் புனித கொலை செய்யப்பட்டவரா?

ஆன்மீக அரசியல்

பழைய ஏற்பாடு, பவுல், நற்செய்தி, கடவுள்

யூதர்களின் புனித நூலாக கருதப்படும் பழைய ஏற்பாட்டை ஆதார நூலாகக் கொண்டு உருவாக்கிய ஒரு கனவு கதையே இயேசுவைப் பற்றி பேசும் புதிய ஏற்பாட்டு நூல். இந்த நன்னெறி கதை கி.பி 300 களில் கான்ஸ்டன்டைன் மற்றும் கி.பி. 380 ல் தியோடோசியஸ் என்கிற உரோமை பேரரசர்களால் அதிகாரத்தின் துணையோடு வரலாறாக உயிர்ப்பு பெற்று எழுந்தது. அறிவியல் பூர்வமாக இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்ததற்கான எந்த சான்றுகளும் ஆன்மீக நூலான பைபிளைத் தவிர வரலாற்று நூல்களில் கிடையாது.

இயேசுவைப் பற்றி சொல்லும் நற்செய்தி நூல்கள்? இவைகள் வரலாற்று நூல் அல்ல, பழைய ஏற்பாட்டை ஆதாரமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. கதைக் கரு, திரைக்கதை, மெயின் கதாபாத்திரம், துணை கதாபாத்திரஙகள், வில்லன், சஸ்பென்ஸ், கதை நடைபெறுகிற காலம், நேரம், இடம், காட்சிகள், கிளைமேக்ஸ் என்று இலக்கிய அடிப்படையில் எழுதப்பட்ட கிரேக்க படைப்பு நூலே இந்த நற்செய்தி நூல்கள். இதற்கு பல உதாரணங்களைக் கொடுக்க முடியும். இயேசு என்கிற பெயரே அடிப்படையில் வரலாற்று பெயர் அல்ல, அது ஓர் ஆன்மீக பெயரே. எபிரேய மொழியில் யோசுவா என்பதன் கிரேக்க மொழி பெயர்ப்பே இயேசு என்கிற பெயர் ஆகும்.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களை கானான் தேசத்திற்குள் வழிநடத்திய யோசுவா போல, உரோமை ஆளுகையின் கீழ் அடிமைகளாக இருந்த யூதர்களை விடுவிக்கும் மெசியாவை கடவுள் அனுப்பி இறையாட்சி என்கிற பல்லாண்டு யூத கனவை நனவாக்க பழைய ஏற்பாட்டை தழுவி போதித்த வாய் மொழி நம்பிக்கை போதனையே பிற்காலத்தில் நற்செய்தி நூல்களாக எழுத்து வடிவம் பெற்றது. இந்த போதனை முதல் நூற்றாண்டு யூதர்களுக்கானது. நமக்கானதும் அல்ல, நம் காலத்திற்கு ஆனதும் அல்ல.

ஆக, வாய்மொழி போதனைகளை ஆதாரமாக வைத்து பிற்காலத்தில் எழுத்துருவம் கொடுக்கப் பட்ட இந்த நற்செய்தி நூல்கள் வெறும் இலக்கிய படைப்புக்களே, பொன்னியின் செல்வன் போல. அதிலும் கூட, முதலில் இயேசுவைப் பற்றி எழுதியது இந்த நற்செய்தி நூல்கள் அல்ல (கி.பி.70க்கு பிறகே நற்செய்தி எழுதப்பட்டது), மாறாக பவுல் என்கிற மனிதர். இவர் கி.பி 50 களில் இயேசுவைப் பற்றி எழுதிய போதனை கடிதங்களில் காணப்படுகிறது. ஆனால், இவர் இயேசுவைப் பார்த்தது கிடையாது, இயேசுவின் போதனையைக் கேட்டது கிடையாது, இயேசு யார் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் தான் தன்னுடைய அறிவு திறமையால் முதன் முதலாக கடவுளை புனித கொலை செய்த கொலையாளியாக ஆபிரகாமின் கதையை ஆதாரமாக கொண்டு வாதிட்டு கிறிஸ்தவர்களுக்கான விசுவாச கோட்பாடுகளை உருவாக்கினார்.

வாய் மொழி போதனை கதைகளை (Oral Tradition) வரலாறு என்று நம்பி இயேசுவை கடவுளாக வழிபட தொடங்கிய யூத மதத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களை முதலில் கொடுமைப் படுத்துகிறார். ஒரு கட்டத்தில் காட்சி கண்டதாக சொல்கிறார். ஆனால், இவர் கண்ட காட்சி வெறும் உளவியல் பூர்வமானதே, உண்மையானது அல்ல என்பதற்கு இவருடையே போதனையே ஆதாரம். ஏனென்றால், இவர் கண்ட காட்சி உண்மையாக இருந்திருந்தால், முதல் நூற்றாண்டில் உலகம் அழிந்திருக்கும், இயேசு மீண்டும் வந்திருப்பார், கடவுள் உலகை நேரடியாக ஆண்டிருப்பார். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இதில் எதுவுமே நடக்கவில்லை என்பதிலிருந்து இவருடைய காட்சியை கற்பனை மற்றும் வெறும் உளவியல் சிக்கலாகவே புரிய முடியும்.

பழைய ஏற்பாட்டில் ஒரு கன்னி மகனைப் பெற்றெடுப்பாள் என்பது இயேசுவை முன்குறிக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு மொழியாக்கத்தில் (Translation) எழுந்த தவறு. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட எபிரேயத்தில் ha-alma ( הָעַלְמָ֗ה ) என்கிற வார்த்தை ஓர் இளம்பெண்ணைக் குறிக்கிற வார்த்தை, அது கன்னிப் பெண் அல்ல. கன்னிப் பெண்ணைக் குறிக்கிற எபிரேய வார்த்தை bethulah. இதை கிரேக்கத்தில் ‘கன்னிப் பெண்’ என்று மரியாளுக்கு பொருந்துகிற வகையில் தவறாக மொழி பெயர்த்தனர். அதுவும் எசாயா இறைவாக்கினர் காலத்தில் வாழ்ந்த ஆகாசு என்கிற மன்னனுக்கு கொடுக்கப்பட்ட அடையாளமே இது தவிர, 700 ஆண்டுகளுக்கு பிந்தி பிறந்ததாக எழுதப்பட்ட இயேசுவுக்கு பொருந்தாத ஒன்று.

இயேசு சிறு குழந்தையாக இருந்த போது பல குழந்தைகள் கொல்லப் பட்டனர். ஆனால் இது வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, புதிய ஏற்பாட்டில் மோசே குழந்தையாக இருந்தபோது நடந்த நிகழ்வை ஆதாரமாக வைத்து இயேசுவை மோசே போன்ற இறைவாக்கினருள் ஒருவராக காட்டிட எழுதப்பட்ட நிகழ்வே இது என்று விவிலிய அறிஞர்களால் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது. மோசே சீனாய் மலையிலிருந்து பத்துக் கட்டளைகளை பெற்றதை அடிப்படையாக வைத்தே இயேசுவின் மலைப்பொழிவு சொற்பொழிவு உருவாக்கம் பெற்றது. இவைகள் அனைத்தும் நற்செய்தி நூல்கள் வரலாற்று நூல்கள் அல்ல என்பதற்கான ஆதாரம் மற்றும் வெறும் ஆன்மீக போதனையே என்பதற்கான சான்றுகள்.

பழைய ஏற்பாட்டில் மெசியா எப்படி துன்பப்பட வேண்டும் என்கிற எசாயா புத்தகத்தை ஆதாரமாக வைத்தே, இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட கத்தாத செம்மறி கதை உருவானது. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் எலியா ஒரு விதவையின் இறந்த மகனுக்கு உயிர் கொடுத்த நிகழ்வை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட கதையே இயேசு விதவையின் மகனுக்கு உயிர் கொடுத்த புதிய ஏற்பாட்டு கதை.

இயேசுவின் 12 சீடர்கள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் குலம் 12 என்பதைக் குறிக்கிறது. இது வரலாறு அல்ல, அடையாள மொழியே. இந்த 12 குலத்தில் ஒன்றான லேவி குலத்திற்கு நாடு கிடையாது. ஏனென்றால் அவர்கள் கடவுளுக்காக அர்ப்பணிக்க பட்டவர்கள். இவர்களை யூத மதத்தின் தலைவர்களுக்கு ஒப்பிடலாம். முதல் நூற்றாண்டில் இவர்கள் கடவுளை பணத்திற்காக, பதவிக்காக விற்றுக் கொண்டிருந்தார்கள். இதனை அடிப்படையாக வைத்து உருவாக்கிய கதாபாத்திரமே யூதாஸ்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பாலைவனத்தில் 40 ஆண்டுகள் மன்னாவும், இறைச்சியும் கொடுத்தார். இதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கியதே இயேசுவின் பாலைவன சோதனை மற்றும் பாலைவனத்தில் மக்களுக்கு அப்பங்களையும், மீன்களையும் பகிர்ந்து கொடுத்த கதை. இது நடந்த வரலாறு அல்ல, புதுமையாக கொடுக்கப் பட்ட இறையாட்சி பற்றிய கனவு போதனை.

இயேசு படகில் கடலை அடக்கிய நிகழ்ச்சி பழைய ஏற்பாட்டில் யோனா என்கிற இறைவாக்கினர் கதையிலிருந்து உருவாக்கம் செய்யப்பட்டது. அவர் மீனில் வயிற்றில் உயிரோடு இருந்தார். அவரை கடலில் தூக்கி எறிந்த உடன் கடல் அமைதியானது. இதுவே இயேசு கதாபாத்திரத்திற்கும் பொருத்தி எழுதப்பட்டது. இயேசுவின் உயிர்ப்பு மூன்றாம் நாள் என்பது வரலாற்று நிகழ்வு அல்ல, பழைய ஏற்பாட்டை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட அடையாள மொழியே.

இயேசு செய்ததாக எழுதப்பட்ட மாய, மந்திர கதைகளான செத்தவர்களை உயிரோடு எழுப்புவது, அற்புதம் செய்வது, பறப்பது, உணவு கொடுப்பது, கடலில் நடப்பது எல்லா மத நூல்களிலும் வாசிக்க முடியும். இவைகள் வரலாற்று மொழி அல்ல, இது ஒரு இலக்கிய படைப்பில் கதாநாயகனை உயர்த்திப் பேச பயன்படுத்தும் ஒரு சமய அடையாள மொழியின் வடிவம் ஆகும், இப்போது நாம் திரைப்படங்களில் பார்க்கும் கதாநாயகன் ஒரே அடியில் 50 எதிரிகளை பந்தாடுவது போன்று. இது உண்மையல்ல, ஒரு திரைப்பட மொழி என்று நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வது போன்று.

நேற்றைய நாள் சாப்பிட்டதையே நினைவில் வைக்க தடுமாறும் மனித மூளை, நாற்பது ஆண்டுகளுக்கு பின் இயேசு இறந்த பிறகு எழுத்து வடிவம் பெறும் பைபிளில் இயேசு பேசிய வரலாற்று வார்த்தைகள் என்று போதிப்பது லாஜிக் முரண். மன்னிப்பு, செபம், தர்மம், நோன்பு பற்றிய அத்தனை போதனைகளும் இயேசுவின் வரலாற்று மொழிகள் அல்ல, அவைகள் அந்தந்த காலத்திற்கு தேவையான போதனைகளாக இயேசுவின் பெயரால் ஆன்மீக வாதிகளால் புகுத்தப்பட்ட தனி நபர் ஆன்மீக சிந்தனைகளே.

பைபிளின் தொடக்கத்தில் கடவுள் உலகை உண்டாக்கிய கதையில், நிலத்தில் வியர்வை சிந்த உழைப்பதும், பெண் பிரசவிப்பதும், பாம்பு வயிற்றால் ஊர்ந்து செல்வதும் கடவுளின் சாபமாக வாசிக்கிறோம். ஆனால், நெற்றி வியர்வை நிலத்தில் விழுவதே ஆரோக்யம், பெண்ணின் பிரசவ வலி அவளுக்கு ஆசீர்வாதம், பாம்பின் இந்த உடல் அமைப்பு நீர், நிலம், மலை என்று எங்கும் விரைந்து செல்ல உதவுவதற்கு இயற்கை கொடுத்த வரம் என்றும் அறிவியல் சொல்கிறது. கடவுள் அறிவியல் அறிவு இல்லாதவரா? கடவுள் தான் இப்படி எழுத சொன்னார் என்றால் கடவுள் முட்டாளா? ஆக, மனிதனின் கற்பனையில் உதித்த கதைகளே படைப்பு கதைகள். அது போலத்தான் இயேசு என்கிற கதாபாத்திரம் உருவான கதையும்.

இந்த உலகத்தில் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள். ஒன்று உண்மையான கடவுள், இரண்டாவது மனிதர்கள் உருவாக்கிய போலி கடவுள்கள். உண்மையான கடவுள் எந்த மதத்தையும் உருவாக்க வில்லை, எந்த மதத்திற்கும் சொந்தமும் இல்லை. அவர் மக்களுக்கானவர். இந்த போலி கடவுளே ஆன்மீக வாதிகள் ஏழைகளை ஏமாற்ற உருவாக்கிய கடவுள், காணிக்கை போட்டால் வேலை செய்கிற கடவுள், பணக்காரர் மற்றும் பதவி மோகம் பிடித்த கயவர்களோடு நெருக்கம் காட்டுகிற கடவுள், மாய மந்திர தத்தி வேலை செய்கிற கடவுள், புகழ்ந்தால் சந்தோசப்பட்டு அள்ளிக் கொடுக்கிற கோமாளி கடவுள், குத்தாட்டம் போடுகிற கடவுள், கத்தி ஊளையிடுகிற கடவுள், அப்பாவி மக்களை பயமுறுத்துகிற கடவுள், டி.வி சேனல்கள், பணக்கார கல்லூரிகள் நடத்துகிற கடவுள், தொண்டு நிறுவனம் நடத்தி பணத்தை ஏப்பம் விடுகிற கடவுள். கோயில்கள் கட்டுகிற கடவுள்.

நம் மதம் நாம் விரும்பி பெற்றது அல்ல, நாம் பிறந்த குடும்பத்தால் பெற்றது. பின் ஏன் மதவெறி? மதங்களின் ஒரே நோக்கம் கடவுள் நம்பிக்கையை தருவதாக மட்டுமே இருக்க வேண்டும். மத வெறியை அல்ல. ஆனால், தமிழகத்திலோ கடவுள் நம்பிக்கையை தர வேண்டிய மத நிறுவன தலைவர்கள் பொய், புரட்டு, இலஞ்சம், ஊழல் பிடித்து கடவுள் நம்பிக்கையை கேலி செய்யும் திராவிட கட்சிகளோடும், சாதி, மொழி, இன வெறி பேசும் தலைவர்களோடும் கைகோர்த்து திரிவது கேவலத்தின் உச்சம். ஏனென்றால், இவர்களிடம் எள்ளளவும் கடவுள் நம்பிக்கையும் இல்லை, கடவுள் பற்றிய பயமும் இல்லை.

அரசியல் அதிகாரமே தமிழகத்தில் அனைத்தையும் நிர்ணம் செய்கிறது, கடவுள் அல்ல. அரசியல் மாற்றம் மலர மக்கள் அரசியல் விழிப்புணர்வை பெறுவதும், வரலாற்று கடவுள், ஒரே கடவுள், உண்மை கடவுள், மந்திர கடவுள் என்கிற மூட நம்பிக்கையை தூக்கி எறிவதும் அவசியம். ஆனால், மக்கள் இந்த அரசியல் விழிப்புணர்வை பெறாதபடிக்கு அதிகார வர்க்க கைக்கூலிகளான ஆன்மீக வாதிகள் மக்களை திசை திருப்பும் வேலையை காலத்திற்கும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆன்மீக மயக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

களம் கடவுளுடையது அல்ல, அதிகாரமும் கடவுளுடையது அல்ல. ஆனால், அதிகார செருக்கும், அறிவு கர்வமும் உடைய இந்த மனித குரங்குகளை நிராயுதபாணியாக நின்று தன்னுடைய ஞானத்தால் வீழ்த்திய அவதார கதைகளே புராணங்கள். அது ஆதி மனிதன் கூட்டமாக நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் நடந்திருக்கிறது, அது மன்னராட்சியில் நடந்திருக்கிறது, ஏகாதிபத்திய ஆட்சி முறையில் நடந்திருக்கிறது, சர்வாதிகாரியின் காலத்தில் நடந்திருக்கிறது, கண்டிப்பாக மக்களாட்சி நிலவும் நம் காலத்திலும் நிச்சயமாக நடந்தேறும்.